name='description'/> தமிழ்ப் பணி மன்றம்: புதிய தமிழ்ச் சொல் (08) இருப்பு வழி ( RAILWAY )

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

புதிய தமிழ்ச் சொல் (08) இருப்பு வழி ( RAILWAY )

புதுச்சொல் புனைவோம் !



RAILWAY = இருப்பு வழி
------------------------------------------------------------------------------------------------------

“ரயில்” என்ற சொல் நமது ஆடையில் ஒட்டிக் கொண்டுவிட்ட ஒட்டுப் புல். இதை அகற்றவே முடியாதோ என்று ஐயப்படும் அளவுக்கு அது மிக வலிமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது !

ஆமாம்..... ”ரயில்” என்றால் என்ன ? நாம் ஏறிப் பயணம் செய்கிறோமே அந்த வண்டி இயக்கப் படுவதற்கான வழித் தடத்தில் பொருத்தப் பட்டிருக்கும் தண்டவாளத்திற்குத் தான் ”ரயில்” என்று பெயர். வியப்பாக இருக்கிறதா ? உண்மை அது தான். நாம் பயணிக்கும் வண்டிக்குப் பெயர் டிரைன் (Train), ”ரயில்” அல்ல !

”ரயில்வே” (Railway) என்றால் என்ன ? தண்டவாளப் பாதை என்று பொருள். இந்தத் தண்டவாளப் பாதையில் பயணிகள் வண்டியும் செல்லும்; சரக்கு வண்டியும் செல்லும். ஆய்வு ஊர்தியும் (Trolly) செல்லும். அதனால் தான் வண்டியை மையமாக வைத்துப் பெயரிடாமல், பாதையை மையமாக வைத்து இருப்புப் பாதை (Railway) என்று பெயரிடப் பட்டுள்ளது !

”ரயில்வே” என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் ? ”தண்டவாளப் பாதை” என்பது நேரடி மொழி பெயர்ப்புச் சொல். தண்டவாளம் இரும்பினால் ஆனது என்பதால் “இரும்புப் பாதை” என்று சுருக்கமாகச் சொல்லலாம். இலக்கணப்படி இரும்பு + பாதை = இருப்புப் பாதை என்று தான் சொல்ல வேண்டும் !

“வே” (Way) என்பதை பாதை என்றும் சொல்லலாம்; வழி என்றும் சொல்லலாம். எனவே “ரயில்வே” என்பதைச் சுருக்கமாக “இருப்பு வழி” என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் !

“பஸ்” என்பதைப் போல “ரயில்” என்பதும் மக்களிடையே பேச்சு வழக்கில் நிலை பெற்று விட்ட ஒரு சொல். இதை மாற்றுவது எளிதன்று. ஆனால், எழுத்தில் வரும்போது “ரயில்வே” என்பதற்குப் பதில் “இருப்பு வழி” என்பதைப் பயன்படுத்தலாம் அல்லவா ?

“இருப்பு வழி” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும், தொடர்புடைய ஏனைய சொற்களையும் பார்ப்போமா !



============================================================



RAILWAY......................................= இருப்பு வழி
RAILWAY TRACK........................= இருப்பு வழித் தடம்
RAILWAY LINE............................= இருப்புப் பாட்டை
RAILWAY SIGNAL.......................= இருப்பு வழிக் குறி
RAILWAY STATION.....................= இருப்பு வழி நிலையம்
RAILWAY STATION MASTER.....= நிலைய மேலாளர்
BROAD GAUGE LINE.................= அகல் வழிப் பாதை
METER GAUGE LINE..................= இடை வழிப் பாதை
NARROW GAUGE LINE..............= குறு வழிப் பாதை
PLATFORM..................................= நடை வழி
PLATFORM TICKET.....................= நடைவழிச் சீட்டு
TICKET COUNTER......................= சீட்டு மாடம்
SEASON TICKET.............. ..........= பருவச் சீட்டு
RAILWAY DEPARTMENT.............= இருப்பு வழித் துறை
RAILWAY EMPLOYEE...... ..........= இருப்பு வழி ஊழியர்
TRAIN...........................................= இருப்பூர்தி
GOODS TRAIN.............................= சரக்கூர்தி
PASSENGER TRAIN....................= பயணர் ஊர்தி
EXPRESS TRAIN.........................= விரைவூர்தி
SUPER FAST EXPRESS..............= கதிப்பூர்தி
TICKET RESERVATION..............= சீட்டு முன் பதிவு
“TATKAL” RESERVATION..........= முந்துறு முன்பதிவு
RAILWAY GATE...........................= வழிக் கடவை
RAILWAY OVER BRIDGE...........= இருப்புவழி மேம்பாலம்
RAILWAY CANTEEN...................= இருப்பு வழி அருந்தகம்


===========================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

===========================================================


இருப்பூர்தி

2 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .